என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி! :: பாஸ்டர். தாமஸ் :: Tamil Christian Sermon

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி!
(பாஸ்டர். தாமஸ்)
Sermons on Psalm 103 to Preach
தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

 “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங். 103:1,2). சங்கீதக்காரன் தன் ஆத்துமாவை கூப்பிட்டு சொல்லுகிறான்

ஒவ்வொன்றாக நினைத்து அவன், ஏறக்குறைய 30 காரியங்களுக்காக ஸ்தோத்திரம் பண்ணும்படிசொல்லுகிறான். 

ஒரு மியூசிக் டீம் போல. மியூசிக் டீம் போல ஸ்தோத்திரம். முதலில் லீடராக இருப்பது எது? ஆத்துமா. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி. மீதியுள்ளதற்கு பெயர் ஒன்றும் சொல்லவில்லை. என் சர்வ அந்தரங்கமே என்று சொல்லியிருக்கிறது. மலையாளத்தில் சர்வ அந்தரங்கமே, இங்கிலீஷில் ஆல் தட் இஸ் வித்தின் மீ. எனக்குள்ள இருக்கிற சகலமுமே ஆண்டவரை ஸ்தோத்தரியுங்கள்.

 என் ஆத்துமாவே என் சர்வ அந்தரங்கமே என் உள்ளான பாகங்களில் என்னென்ன உண்டோ? எல்லாம் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும். என் உணர்ச்சிகள், என் சரீரம், என் கை, என் கால், என் வார்த்தைகள் எனக்கு என்னவெல்லாம் உண்டோ? எல்லாம் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்.

 காரணம் ஆண்டவர் செய்த நன்மைகள் அத்தனை பெரியது. ஸ்தோத்திரம் பண்ணாமல் இருக்க முடியாது. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. நம்மை உயிரோடு காக்கிறார். எத்தனை ஆபத்துகள் கர்த்தர் நம்மை காக்கிறார். நமக்கு அன்ன ஆகாரம் தந்து நடத்துகிறார்.

 கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார்.

 நான் வெறும் ஒரு சின்ன கிராமம், முழுவதும் இந்துக்கள். கிறிஸ்தவன் என்று ஒருவனைத் தேடிகூட கண்டுபிடிக்க முடியாது. ஒரு பக்கம் நாய்டுஸ், அவர்கள் வைராக்கியமான இந்துக்கள். இன்னொரு பக்கம் விக்கிரக ஆராதனைகாரர்கள். அந்த இடத்திலிருந்து ஆண்டவர் என்னை இரட்சித்து, ஆண்டவருடைய பிள்ளையாக்கி உங்கள் முன்னே நிறுத்தியிருக்கிறார்.

 எனக்கு படிப்பை பற்றி அவ்வளவாக தெரியாது. காலேஜ் என்றால் என்ன என்று கேட்பேன். காலேஜில் போக, படிக்க, எத்தனையோ காலேஜில் போய் இறங்க கர்த்தர் எனக்கு அதிசயமான கிருபை தந்தார்.

 அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சிலர் கொஞ்சம் வசதி வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.

 சிலருக்கு இந்த நினைவு வராதபடியினால் தான் வாழ்க்கை தோல்வியாக முடிந்துவிடுகிறது.

 மூன்றாம் வசனம். “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி” (சங். 103:3). ஆண்டவர் செய்த நன்மைகளையெல்லாம் முத்துக்களாக நீங்கள் எடுத்துக்கொள்ளுவீர்களானால், முதல் முத்து மிக முக்கியமான முத்து என்னது? அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.

 பாவங்களை மன்னித்ததினால் தான் மீதியுள்ள எல்லா நன்மைகளும் தொடருகிறது. ஒன்று, பாவத்தை ஆண்டவர் மன்னிக்கிறார். இங்கே அக்கிரமங்களையெல்லாம்.

 நாமெல்லாம் நம்முடைய அப்பாவிடத்திலிருந்து, அம்மாவிடத்திலிருந்து பாவத்தை சுமந்துக்கொண்டே வந்தோம். அதற்கு என்ன பெயர்? ஜென்ம பாவம். இரட்சிக்கப்படும்போது ஆண்டவர் செய்வது, ஜென்ம பாவத்தை மன்னிக்கிறார்.

 ஜென்ம பாவத்தை மன்னித்ததும், சிலர் இனி எனக்கு பாவத்தின் பிரச்சனையே கிடையாது என்று துணிந்து பேசத் தொடங்குகிறார்கள். பாவம் நம்மை மேற்கொள்ளாது. ஆனால், பாவம் நம்மோடு போராடிக்கொண்டேயிருக்கும்.

 பாவம் செய்கிற ஆத்துமா சாகும். சின்ன பாவமோ, பெரிய பாவமோ? சாகும். பாவத்தின் சம்பளம் மரணம். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே.

 ஆதாமிலிருந்து நாம் கொண்டு வந்தோமே பாவம், அதை ஆண்டவர் மன்னித்துவிட்டார். ஆனால் நம்முடைய வாழ்க்கையிலே கிரியையிலுள்ள பாவம், செய்யாமல் விட்டுவிட்ட பாவம் என்று இரண்டு விதமான பாவங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. சின்ஸ் ஆப் கமிஷன் என்று சொன்னால், நாம் செய்கிற பாவம். ஒருவனை ஏசியிருப்போம், ஒருவனை கை ஓங்கி அடித்திருப்போம். ஒருவனிடத்தில் கசப்பு வைத்துக்கொண்டிருப்போம்.

 இதெல்லாம் பாவம். கிரியைகளின் பாவம். அநேகருடைய வாழ்க்கையில் வியாதியிலிருந்துகூட விடுதலையில்லாமல் இருக்க காரணம் சில அறிக்கையிடாத பாவங்களை மறந்துவிடக் கூடாது. சிலருடைய வாழ்க்கையில் நல்ல கசப்பை, விரோதத்தை வைத்திருப்பார்கள். இருக்கிற வரையிலும் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது வரவேமுடியாது. நீங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும்.

 ஒரு வக்கீலுக்கு தீர்க்கமுடியாத வயிற்றுவலி. எத்தனையோ டாக்டர்கள் பார்த்துவிட்டார்கள். கடைசியாய் விசுவாசியான ஒரு டாக்டரிடத்தில் அவன் போனான்.  டாக்டர் அவனைப் பார்த்துவிட்டு சொன்னார், உனக்கு ஒரு வியாதியும் இல்லையப்பா. நீ யாரையாவது மன்னிக்காமல் இருக்கிறாயா? என்று கேட்டார்.

 ஆம், நான் மன்னிக்காமல் இருக்கிறேன், அவனை மன்னிக்கப்போகிறதில்லை. எங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன். எங்கள் குடும்பத்தை நாசமாக்கினவன். என் அப்பாவை தொலைத்தவன், எங்கள் சொத்தை அபகரித்தவன்.

நான் வக்கீலாக மாறினதே அவனுக்கு விரோதமாய் கேஸ் போடுவதற்காகத்தான். அந்த குடும்பத்தை நாசமாக்க வேண்டும். அப்பொழுது டாக்டர் சொல்லிவிட்டார், அந்தக் குடும்பத்தை நீ மன்னிக்காவிட்டால், உனக்கு வியாதி சுகமாகாது. இந்த வியாதியால் நீ சாகப்போகிறாய்.

 ஒன்றில் மரணத்தை நீ ஏற்றுக்கொள். இல்லாவிட்டால் மன்னித்து, மறந்துவிடு. அவன் கோபத்தில் போனான். யோசித்தான். சாகவேண்டுமா? சாவதைப் பார்க்கிலும், மன்னிப்பு கிடைத்து, நமக்கு வாழ்வுகிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். கடைசியாக அவன் டாக்டரிடத்தில் வந்து சொன்னான், நான் மன்னிக்கிறேன். கேஸையெல்லாம் விட்ரா பண்ணுகிறேன், எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் கர்த்தர் அவனுக்கு விடுதலையைக் கொடுத்தார்.

 ஆதியாகமம் 3:5,6 வசனங்களில் ஏவாள் பாவம் செய்தாள். அது அவளுக்கு கவர்ச்சியாக இருந்தது. பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிற விருட்சமுமாய் இருக்கிறது என்று நினைத்து அதை செய்தாள்.

 யோசுவா 7:21-ம் வசனத்தில், எரிகோவிலுள்ள ஒரு சிறிய பொருளைக்கூட தொடக்கூடாது என்று யோசுவா கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டு இருந்தான்.

 ஆகான் பார்த்தான், பாபிலோனிய சால்வை, தங்கக்கட்டி அவன் பாவத்திற்கு அடிமையானான். வாலிபப் பெண்கள், வாலிப ஆண்களோடு நான் திட்டவட்டமாய் சொல்லுகிறேன், உங்கள் வாழ்க்கையில் பாவம் கவர்ச்சியானது, பெரிய ஆபத்தானது.

 பாவம் உங்களை ஏமாற்றிப்போடும். ஏவாள் பாவத்திற்கு இடங்கொடுத்து கடைசியில் மகிமையை இழந்துபோனாள். அவளுடைய புருஷனும் இழந்துபோனான்.

 பாவம் நம்மை தேவனைவிட்டு பிரித்துவிடும். மறந்துவிடாதீர்கள். பாவம், அக்கிரமம், அநீதி யாருடைய வாழ்க்கையில் இருந்தாலும் மிக ஆபத்தான காரியம்.

 “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங். 51:12). தாவீதை இந்தப் பாவம் ஏமாற்றிவிட்டது. பத்சேபாளிடத்தில் பாவம் செய்தான். உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி போய்விட்டது. இரட்சணியத்தின் சந்தோஷத்தை இழந்துபோனான். இப்பொழுது கதறுகிறான்.  நீர் எனக்குத் தந்த பரிசுத்த ஆவியை என்னைவிட்டு எடுத்துப்போடாதேயும்.

 சின்ஸ் ஆப் ஒமிஷன் இருக்கிறது. செய்ய தவறின காரியங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யவேண்டும். ஒருவன் கையை நீட்டியிருந்தான், அவனுக்கு நன்மை செய்ய மறந்துவிட்டோம். இரண்டு நாளைக்கு முன் இயேசுவே ஐயோ, இயேசுவே என்று ஒரு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலே கீழே எல்லாம் ஏறி பார்த்தேன். ஒன்றையும் காணவில்லை.

 நம் தம்பிமார்கள் இரண்டுபேரை அனுப்பி போய் பார்க்கச் சொன்னேன். அவர்கள் யாரோ ஒருவன் சத்தம்போடுகிறான் என்று சொல்லி திரும்பி வந்துவிட்டார்கள்.

 பிறகு மதியம் சத்தம் போட்டவன் என்னிடத்தில் வந்தான். இழுப்பு வந்து நகர்ந்து, நகர்ந்து இந்த கல்லு வரை வந்தேன். ஆண்டவரே என்று சத்தம் போட்டால் யாராவது வந்து என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவார்கள் என்று நினைத்தேன். உங்கள் ஆட்கள் வந்து எட்டி பார்த்துவிட்டு பயந்து போய்விட்டார்கள்.

 யாரோ ஒரு திருடனோ, பொல்லாதவனோ என்று நினைத்து பயந்து போய்விட்டார்கள். விடியற்காலை 4 மணிக்கு. அவனுக்கு ஒரு சின்ன நன்மை, அவனைத் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தால் போதும். அது அவனுக்கு நன்மையாக இருக்கும். நன்மை செய்ய தவறிவிடுகிறோம்.

 “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று” (சங். 32:3,4).

 காரணம் என் பாவத்தை நான் அறிக்கையிடவில்லை. வெளியே சொல்லவில்லை. ஆனால் நான் பாவத்தை அறிக்கை செய்தபோது, என் பாவத்தின் தோஷத்தை தேவரீர் மன்னித்தீர். பாவத்தை மன்னிக்கிறார், பாவத்தின் தோஷத்தையும் ஆண்டவர் மன்னிக்கிறார். மறைத்து வைத்திருக்கிற பாவம், அறிக்கை செய்யாமல் விட்டிருக்கிற பாவம்,  ஆதியாகம் 4:7-ல் வாசற்படியில் ஒரு நாய் படுத்துக்கிடந்ததுபோல், படுத்துக் கிடக்குமாம்.

 “நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” (ஆதி. 4:7). அவன் உன்னை பற்றிக்கொண்டேயிருப்பான். எப்பொழுதுடா பிடிக்கலாம்.

 “அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்” (யோபு 20:11). வாலிப வயதின் பாவம் எலும்புக்குள்ளே இருக்கும். பாவம் செய்த உங்களுக்கு மறந்துவிடும். ஆனால் அது  எலும்புக்குள் ஏறியிருக்கும். நீங்கள் வயதாகி செத்தாச்சி. செத்தபிறகு உங்களோடு மண்ணில் படுத்துக்கொள்ளும். வால வயதின் பாவம்.

 எலும்புக்குள்ளே இருப்பதினால் நமக்கு செழிப்பு வராது. சரியாக இரத்தம் ஊராது. நம்முடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படாது. ஆண்டவர் ஒருநாள் நம்மை கூப்பிடுவார், எழுப்புவார். எழுப்புகிற நாளில் நாம் மாத்திரம் எழும்புவதில்லை. நம்மோடுகூட நம்முடைய பாவமும் எழும்பும்.

 ஆண்டவரோடுகூட கணக்கு கொடுக்கும்போது நம்முடைய பாவம் இங்கே இருக்கிறேன் சார் என்று பாவம் நம்மோடுகூட எழும்பி நிற்கும். “வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்” (யோபு 20:27).

யாருக்காவது பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா? எசேக்கியேல் 18:4-ல்,  ரோமர் 5:12-ல் பாவத்தின் சம்பளம் மரணம். தேவனை விட்டு நம்மை முற்றிலுமாய் வேறுபடுத்திவிடும்.

 ஆண்டவர் செய்த நன்மைகளில் பிரதானமான நன்மை என்னது? அவர் என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்தார். ஆண்டவர் மன்னிக்க வேண்டுமானால்,

 “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). இயேசு என்னை இரட்சித்தார், அதற்குப் பிறகு சில சின்ஸ் ஆப் கமிஷன், சில சின்ஸ் ஆப் ஒமிஷன் உண்டு. அதையெல்லாம் ஆண்டவரிடத்தில் அறிக்கையிடவேண்டும். நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என் கதறுதலினாலே  என் எலும்புகள் எனக்குள்ளே சாரமற்றுப் போயிற்று.

 பாவம் இல்லாத மனிதன் ஒருவனும் இல்லை. பாவத்தை வைத்து கெட்டி கெட்டி காத்துக்கொண்டே இருக்காதீங்க. ஒவ்வொருநாளும் பாவத்திலிருந்து நாம் சுத்தமாகிக்கொண்டேயிருக்க வேண்டும்.

 தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கலாமோ? அப்படி சொல்லல் ஆகாதே. பாவம் தானாக வரும். நாம் ரோட்டில் நடந்து போகிறோம், தூசி நம்முடைய காலில் ஒட்டிவிடும். ஒரு மரத்தின் கீழே போகிறோம், ஒரு பட்சி தலையில் எச்சம் போட்டுவிடும். ஒருவன் சொல்லுவான், ஏய் தலையில் ஏதோ இருக்கிறது. அசுத்தங்கள் வாழ்க்கையில் வந்துவிடும். இருக்கட்டும் என்று நினைக்கக்கூடாது. உடனே கழுவ வேண்டும்.

 டீ சாப்பிட்டோம். டீ எப்படியோ வந்து சர்ட்டில் விழுந்துவிட்டது. டீ கறை அது பரவாயில்லை, அதை உடனே கழற்றி அதில் நான்கைந்து சொட்டு பாலை ஊற்றி கொஞ்சம் தண்ணீரில் அலசி சோப்பு போட்டு கழுவி விட்டோமானால், உடனே கறையிருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 அதுபோல பாவ கறைகளை உடனுக்குடன் அறிக்கை செய்து விட்டு விட்டோமானால், நாம் சுத்தமாக இருப்போம், வெண்மையாக இருப்போம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகலப் பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.

 இயேசுவே பாவம் வந்துவிட்டது, தவறு வந்துவிட்டது. என்னை மன்னியும், என்னை மன்னியும் என்று கேட்கவேண்டும். உம்முடைய இரத்தம் கொண்டு என்னை கழுவும் என்று கதறிக்கொண்டேயிருக்க வேண்டும். நாம் கேட்டோமானால், நம்முடைய மனச்சாட்சியில் ஒரு தைரியம் உண்டாகும்.

 “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்”(1 யோவா. 2:1). நான் சொன்ன மூன்று மருந்து. முதலில் பாவத்தை அறிக்கையிட்டு, விட்டுவிட வேண்டும்.

 அதோடு சேர்த்து இயேசுவின் இரத்தம் கொண்டு கழுவவேண்டும். பரலோகத்திலே பிதாவுக்கு முன்பாக ஆண்டவர் இயேசுவுடைய கை உயரும். ஆண்டவரே என் பிள்ளை பாவம் செய்துவிட்டாள். மன்னியுங்கப்பா. பிதாவாகிய தேவன் மன்னித்துவிடுகிறார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங். 103:12).

 கிழக்கும், மேற்கும் சந்திக்காதது போல ஆண்டவர் பாவத்தை துரத்திவிடுகிறார். இங்கிலீஷ் பைபிளில் சூரியன் உதிப்பதற்கும், சூரியன் அஸ்தமிப்பதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதுபோல, இரண்டும் இணையாதது போல ஆண்டவர் நம்முடைய பாவங்களை அவ்வளவு தூரமாய் எரிந்துபோடுகிறார். அது இனி நினைக்கப்படுவதேயில்லை.

 சிலம்பம் அடித்து பிரயோஜனம் இல்லை. உனக்கு விரோதமாக பட்டயம் எழும்பி வரப்போகிறது. சீக்கிரமாய் மனந்திரும்பு.

 உன் வாழ்க்கையை செம்மைப்படுத்து, சீராக்கு. பாவத்திலிருந்து விடுதலையாக வேண்டும். அக்கிரமங்களை சுமந்துகொண்டு, வைராக்கியங்களை சுமந்துகொண்டு நீ நடக்ககூடாது. மாம்ச இச்சைகளுக்கு கண்களின் இச்சைகளுக்கு இடமே இருக்கக்கூடாது.

 அடுத்த வார்த்தை என்ன? உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

 நோய் சுகமாவதற்கு ஒரு பிரமாணம், “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக். 5:14-16).

 பாவம் மன்னிக்கப்பட்டவுடனே, ஜெபிக்க ஒரு தைரியம் உண்டாகிறது. உண்மையான விசுவாசியானால், ஆண்டவருடைய சமுகத்தில் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். யாரிடத்திலாகிலும் கசப்பு இருக்கிறதா? வருத்தம்  இருக்கிறதா? ஆண்டவர் விரும்பாத குற்றமோ, குறையோ என்னிடத்தில் இருக்கிறதா?

 உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, குணமாக்குகிறார் என்று முடிக்கவில்லை.

 ஆஸ்பத்திரிக்குப் போனால் மருந்து கொடுப்பார்கள். பிறகு சைடு எப்பக்ட் இருக்கும். பிறகு அதற்கு மருந்து கொடுப்பார்கள்.

ஆண்டவரும் சுகமாக்குகிறார், அதில் ஒரு சைடு எப்பக்ட்டும் இருக்காது.

 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு.

 பாவத்தோடு விளையாடுகிறவன் கண்ணில் அகப்பட்டுவிடுவான். பிறகு தப்பித்து செல்ல முடியாது. என்ன வரும்? பிராணன் அழிவுக்குள்ளே போகும். ஆங்கிலத்தில் ஆழமான குழியிலும், அழிவிலும் போய்விடும்.

 நீதிமொழிகளில் இருக்கிறது. உன் ஆத்துமா அழுகிப்போனபின்பு நான் போதகருடைய வார்த்தைக்கு செவிக்கொடுத்தேனில்லையே, கொஞ்சங்குறைய சகல குற்றமும் செய்தேனே.  என்று நீ கதறவேண்டியதிருக்கும்

 உங்கள் வாழ்க்கை அழிவுக்கு நேராக போகிற வாழ்க்கை. ஆண்டவர் தூக்கி, ஆண்டவர் காப்பாற்றுகிறார். மாத்திரமல்ல, உன்னை கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டி. என் தலையில் இருக்கிற கிரீடம் என்னது? ஆண்டவருடைய கிருபை. ஆண்டவருடைய இரக்கம். என்னை அபிஷேகித்து விடுகிறார். என்னை ராஜாவாக்கிவிடுகிறார். டிரான்ஸ்லேசனில் உங்களை அழகாக்குகிறார், உங்களை கனப்படுத்துகிறார், உங்களை கிரீடம் சூட்டுகிறார், அன்பான இரக்கத்தினாலும், மென்மையான கிருபையினாலும், முடிசூட்டுகிறார்.

 ஒருத்தி சொல்லிவிட்டாளாம், நான் என்ன வந்தாலும் நகை மாத்திரம் கழற்றமாட்டேன். திடீரென்று ஒருநாள் நான் நகையெல்லாம் கழற்றிவிடுவேன் பாஸ்டர். ஆனால் எனக்கு 55 வயதானால் நான் நகையெல்லாம் கழற்றிவிடுவேன். ஏனென்றால் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவள். 55 வயதானால் நான் ரிட்டயர்டு ஆகிவிடுவேன். நகையில்லாமல் ஒரு பெரிய ஆபிசராக இருப்பது வெட்கம் என்று சொன்னாள்.

 சரி உங்கள் விருப்பம் அம்மா என்று அவரும் சொல்லிவிட்டார். திடீரென்று ஒருநாள் அவள் பார்க்கிற சமயம் தாலி 2 துண்டாக கிடக்கிறது. உடனே அவள் இது தேவசித்தம் நகை கழற்றவேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் கொஞ்சம் ஸ்டிராங்கா தட்டான்கிட்ட கொடுத்து தாலி செய்தாள். நான்கைந்து வாரம் தாண்டி ஒருநாள் பார்க்கிறாள், டபீரென்று துண்டாக உடைந்துபோய்விட்டது. அப்படியே எல்லா நகையையும் கழற்றிவிட்டு, பாஸ்டர் சுந்தரத்தை பார்க்கப்போனாளாம். அவர் ஒரே வார்த்தை, விக்டரி. விக்டரி என்றால் என்ன? ஜெயம். யாருக்கு ஜெயம்? ஆண்டவருக்கு ஜெயம்.

 தேவ கிருபை நம்மை அழகுப்படுத்தும்போது, உலகத்தின் அழகெல்லாம் நமக்கு எதற்கு? நன்மையினால் உன் வாயை திருப்தியாக்குகிறார். தீமையினால் அல்ல. நன்மையினால் கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. வயதாகிப்போச்சி, களைத்துப்போச்சி. பிசாசு கொண்டு வருவான். ஆனால் ஆண்டவர் திரும்பவும் நம்மை உயிர்ப்பிப்பார். இது கழுகினுடைய ஒரு கட்டுக்கதையில் இருந்து வந்தது.

 முதலில் கட்டுக்கதையை சொல்லுகிறேன், கழுகு வயதாகிப்போனதும், அது ஒரு மரத்தில் போய் இருந்தால் காலையிலிருந்து சாயங்காலம் வரை அப்படியே அசையாமல் இருக்கும். செத்ததுபோல இருக்குமாம்.

 அதனுடைய தோகையெல்லாம் உதிர்ந்து போகும். வெறும் உடம்போடு இருக்கும். எல்லாரும் செத்த கழுகு என்று நினைப்பார்கள். திடீரென்று சின்ன சின்ன இறக்கை முளைக்கும். கொஞ்சம் வளரும், செட்டைகளை அடிக்கும், எழும்பி அப்படியே ஆகாயத்தில் அப்படியே பறக்குமாம். இது ஜனங்கள் நினைக்கிற கற்பனை. ஆனால், உண்மையை சொல்லுகிறேன். ஆண்டிற்கு ஒரு தடவை கழுகின் இறக்கையெல்லாம் கீழே உதிரும். உதிர்ந்ததும், அமைதியாக இருக்கும். அமைதியாக இருக்கும்போது திரும்ப முளைக்கும்.

 திரும்ப முளைத்ததும், அது எழும்பும். உன்னதத்திற்கு பறக்கும். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ

 புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசா. 40:31). கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.

 நீ இன்னும் எழும்புவாய், இன்னும் பலன்கொடுப்பாய். நான் பெலவீனப்பட்டுப்போனேன் என்று சொல்லுகிற சகோதரனே, சகோதரியே நீ உன் பாவத்தை மட்டும் அறிக்கைப்பண்ணு, கல்வாரியின் தூய இரத்தம் கொண்டு கழுவப்படு, நீ சோர்ந்திருக்க மாட்டாய். நீ எழும்புவாய். இன்னும் பயன்பட போகிறாய்.

 இது வயோதிபருக்கு மாத்திரம் சொல்லப்படுகிற பிரசங்கம் என்று நினைக்கவேண்டாம்.  15 வயது பையன் ஆவென்று தூங்கிக்கொண்டிருக்கிறான். வயது அல்ல பிரச்சனை.

 ஒடுக்கப்படுகிற யாவருக்கும் கர்த்தர் நீதியையும், நியாயத்தையும் செய்கிறார். கர்த்தர் உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்காட்டாமலும் இருக்கிறார்.

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!