பிரசங்கம் - Ps. தாமஸ்
தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes
“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக் கிறார்”(1கொரி 1:23).
இந்த வார்த்தையின் அமைப்பு ஆங்கிலத்திலே நாங்கள் பிரசங்கிக்கிறோம் இயேசுவை, சிலுவையில் அறையப்பட்டவராக. அவர் கிரேக்கருக்கு பைத்தியம், யூதர்களுக்கு இடறல், விசுவாசிக்கிற நமக்கு தேவபெலன். இயேசுவையே பிரசங்கம் பண்ணுகிறோம். நம்முடைய செய்தியின் அடிப்படையாயிருப்பது இயேசு.
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளே தேறினவனாய் நிறுத்தும்படிக்கு நாங்கள் அவரையே பிரசங்கம் பண்ணுகிறோம். அவரைக்கொண்டு புத்திசொல்லுகிறோம். ஒருவனை குடி வெறியிலிருந்து மாற்றுவதற்கு இயேசு தான். குடிக்காதே என்று சொல்லுவதற்கு ஒரு சங்கமிருக்கிறது. அவர்கள் எத்தனையோ முயற்சி செய்கிறார்கள் தோல்வி. யார் உள்ளே போகவேண்டும்? இயேசு உள்ளே போகவேண்டும்.
ஒருவன் சொன்னான், பள்ளிக்கூடங்களை பெருக செய்தால் தேசம் நன்றாகயிருக்கும் இன்றைக்கு எந்த முக்கு மூலை பார்த்தால் பள்ளிக்கூடம். பிள்ளைகளை இங்கிலிஷ் மீடியம் சேர்ப்பதற்கு ஒருவர் ஒரு காரணம் சொன்னார். பிள்ளைகள் டைகட்டி போகிறதற்கு பெற்றோருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். என்ன படித்தார்கள்? இயேசு ஒருவனுக்குள் வராவிட்டால் பிரயோஜனமேயில்லை.
அமெரிக்கா தேசத்திலே ஒரு பாஸ்டரை பற்றி நான் படித்தேன். 40 வருஷமாய் அவர் ஊழியம் செய்தார். ஆனால் அவருக்கு தெய்வ விசுவாசம் சரியாக இல்லை. கடைசியில் அவருக்கு மனக்குழப்பம். உடனே அவரை மனோதத்துவ நிபுணரிடம் கொண்டு போனார்கள்.
சபை லட்சாதிபதிகளுடைய சபை. அந்த சபையில் நல்ல இரண்டு மூன்று அங்குலம் கனமுள்ள குஷன் நார்கள் தரையில் போட்டிருப்பார்கள். கழுத்து நோகாத அப்படிப்பட்ட நாற்காலிகள் போட்டிருப்பார்கள். அவருக்கு கணக்கிலடங்காத பணம் வரும். அவருடைய நண்பர் ஒருவர் சொன்னாராம், நீங்கள் தான் எல்லாம் முயற்சி செய்து விட்டீர்களே பாஸ்டர். இன்றைக்கு ஒரு கூட்டம் நடக்கிறது வருகிறீர்களா.
ஒரு ஆவிக்குரிய கூட்டம் போவோமா என்று கேட்டார். போய் உட்கார்ந்தால் அவருடைய பிரசங்கத்தை இவர் ரசிக்கவில்லை. இந்த பிரசங்கத்தில் தத்துவமில்லை, ஞானமில்லை, ஒன்றுமேயில்லை, சும்மா இயேசுவை பற்றி சொல்லுகிறார்கள். சத்தம் போடுகிறார்கள்.
கடைசியாக இயேசு உங்கள் உள்ளத்தில் வரவேண்டும் என்று ஒப்புக்கொடுக்கிறவர்கள் யார் என்று கேட்டால், அவர் முன்னால் போய் முழங்கால் போட்டார். இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தவுடனே கொஞ்சம் பரவாயில்லை. அடுத்தது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக காத்திருக்கும் கூட்டத்திற்கு போனார். அபிஷேகம் பெற்று கொண்டார். இவருடைய மூளை கோளாறு,பைத்தியம் எங்கே போய் விட்டதோ ஆளே மாறிவிட்டார். பத்து வருஷமாக ஆவிக்குரிய மகிமையான ஒரு ஊழியம் செய்தார்.
உலகத்தின் தத்துவம், உலகத்தின் ஞானம் குப்பை. மனிதனை மாற்ற வல்லமையுள்ளது எது? இயேசு. வேளாங்கன்னி நல்லாத்தான் இருக்கிறது, நாகூரில் என்ன கூட்டம், இயேசுவை அறியும் வரையில் நன்றாகதான் இருக்கும். சுவிசேஷம் என்றால் என்ன? நல்லசெய்தி.
“தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்”(லூக் 2:10). பயப்படாதிருங்கள். சுவிசேஷம் உள்ளே வந்தால் பயமிருக்காது. சுவிசேஷம் என்று சொன்னால் இயேசு உள்ளே வருகிறது. அத்தனை பிரகாசம் ஒருவராகிலும் துக்கமுகமாயிருக்கவில்லை.
சுவிசேஷத்தினாலே சமாதானம். இயேசு உள்ளே வந்தால் உள்ளத்திலே சமாதானம் உண்டு. சுவிசேஷத்தினாலே நம்பிக்கை. சுவிசேஷத்தினாலே மகிமை உண்டு. தாலினால் மகிமையில்லை, இயேசு
நம்முடைய உள்ளத்திலே வந்தால் உடனே நமக்கு வித்தியாசம் தெரியும். மிக நவநாகரீகமான சபை இயேசு மாத்திரம் இல்லாவிட்டால் நம்முடைய வாழ்க்கை பெரிய ஜீரோ.
அப்.பவுல் சொல்லுகிறார், நாங்கள் இயேசுவை பிரசங்கம் பண்ணுகிறோம். இயேசுவை எப்படி பிரசங்கம் பண்ணலாம்? இயேசு வியாதிகளை குணமாக்குகிறார். சமாதானத்தைத் தருகிறார், இயேசு நல்ல செல்வத்தை செழிப்பை தருகிறார். எல்லாரும் கைகளை உயர்த்தி இயேசுவை கூட்டி கொண்டு போகிறோம் என்று சொல்லுவார்கள்.
ஆனால் அப்.பவுல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பிரசங்கம் பண்ணினார், அதுதான் ரொம்ப
சங்கடம். மூன்று ஆணிகளில் நம்முடைய இயேசு தொங்கி கொண்டிருக்கிறார். நம்முடைய பாவத்தை சுமந்து, நம்முடைய வியாதியை சுமந்து பாரங்களை சுமந்து தொங்கி கொண்டிருக்கிறார்.
சிலுவை மரத்திலே இயேசு தொங்கினதை இந்த படம் வரைந்திருக்கிற ஆட்கள் எப்படி வரைந்திருப்பார்கள் இரண்டு அழகான கொம்பு, இந்த கொம்பெல்லாம் நன்றாக தேய்த்து கோண அளவெல்லாம் வைத்து நன்றாக சதுரபடுத்தி, பாலிஷ் போட்டு, பெயின்ட் அடிக்கப்பட்ட அந்த கொம்பில் இயேசு தொங்குவார். இடுப்பில் சின்னத்துண்டு கட்டிருக்கும். பெயின்ட்டர் உடுத்தினது, இயேசு உடுத்தினதில்லை.
ஐந்து, ஆறு மிக கடினமான எலும்புகள் சந்திக்கிற இடம் கணுக்கட்டு. கணுக்கட்டில் ஆணியறைந்தால், மனுஷன் தலையில் கை வைத்து ஐயோ என்று அழுவான். அதுபோல் இரண்டு கால்களையும் சேர்த்து கால் கணுக்கட்டின் சற்று கீழே இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து ஒரு ஆணி. ஒருவனை கொல்லுவதற்கு கடினமான மரத்தை பாலீஷ்சா போட்டு கொண்டிருப்பார்கள்? வலி தாங்கமுடியாது. ஆண்டவர் நிர்வாணமாய் சிலுவையில் தொங்கினார். அதனால் ஸ்திரிகள் எல்லாம் தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தார்கள்.
பெற்ற தாயிக்கு பக்கத்தில் வரமுடியவில்லை. சிலுவை மரத்திலே தாங்க முடியாத வேதனையோடு தொங்கி கொண்டிருக்கிறார். நம்முடைய பாவங்களையெல்லாம் சுமப்பதற்காக, யாருக்காகிலும் பாரமிருக்கிறதா? இந்த பாரம் சுமக்காதிருங்கள்.
ஒருவருடைய வியாதியை பார்க்கும்பொழுது எனக்கு பாரமுண்டு. ஆனால் ஒரு நாள் கர்த்தர் எனக்கு பாடம் கற்று தந்தார். பாரப்படாத மகனே, நான் யார்? பாரத்தை சுமக்கிற கர்த்தர். சிலுவையிலே பார் நான் உன் பாரத்தையெல்லாம் சுமந்திருக்கிறேன். உங்கள் மனதிலேயிருக்கிற கவலையெல்லாம் இயேசு சுமந்தார். நீங்கள் வீணாக சுமந்தா அவர் என்ன செய்வார்.
ஒரு கிராமவாசி தலையிலே ஒரு கூடையை சுமந்து போனான். பார்த்து காரில் ஏறும் என்று சொன்னான். உடனே காரில் ஏறி அந்த கூடையை தலையில் வைத்து கொண்டானாம். ஐயா என்னை காரில் ஏற்றியதே பெரிய புண்ணியம். அதற்கு மேலே இந்த கூடையையும் நீரா சுமக்கவேண்டும் எவ்வளவு மதிகேடு பாருங்கள்.
இயேசுவே நீர் தான் பரிகாரி, இயேசுவே நீர் தான் எல்லாம், ஆனால் என் கவலை எனக்கல்லவாத் தெரியும். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்11:28).
உன் கண்ணீர், உன் சிடுமூஞ்சிதனம், அடிக்கடி வருகிற கோபம், எரிச்சல், வைராக்கியம் உன்னுடைய எல்லாக்காரியமும் ஆண்டவருக்கு தெரியும். உன்னுடைய பெருமை, பீதாம்பரம் எல்லாம் அவருக்கு தெரிந்து தான் உன்னை கையில் பிடித்தார். உன்னுடைய கதையெல்லாம் இன்னும் நன்றாக தெரிந்து இந்த பொல்லாதவன் எனக்கு போதும் என்று சொல்லி ஆண்டவர் கையிலே ஏந்தினார்.
ஒரு கல்யாணம் நடத்திவிட்டு வந்தேன். இவள் எப்படியிருப்பாளோ அப்படியே உன்னுடைய கையிலே தருகிறேன். அவளிடத்தில் வியாதியிருக்குமானால் உனக்கு தான் வைத்துகொள். சண்டைபோடுவானால் உனக்கு தான். அவள் என்ன நிலைமையிலிருந்தாலும் உனக்கு தான். அவளுடைய பணம் மாத்திரம் என்னிடம் இருக்கட்டும். அவளுடைய அழகு மாத்திரம் எனக்கு வேண்டும்.
அவளுக்குள்ளேயிருக்கிற வியாதியெல்லாம் பேசாதே. என்னெல்லாம் அவளிடத்திலிருக்கிறதோ அத்தனையும் உனக்கு தான் கொண்டுபோ. நன்றாக அந்த தம்பிக்கு விளங்கியது.பவுல் பிரசங்கம் பண்ணும்பொழுது வெறும் இயேசுவை பிரசங்கம் பண்ணவில்லை. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பிரசங்கம் பண்ணினார்.
மிகவும் புகழ்பெற்ற சுகமளிக்கும் ஊழியம் செய்கிற சால்ஸ் ஹன்ரடன் என்கிற குடும்பத்திற்கு ஒரு நாள் சிலுவையிலே நான் எல்லாம் சுமந்தேன் என்ற இரகசியத்தை கர்த்தர் சொல்லி கொடுத்தாராம். சால்ஸ் பிரசங்கம் பண்ணபோகிறார். அப்பொழுது அவர் சொன்னார், இயேசு உன்னுடைய சகல காரியங்களையும் சுமந்திருக்கிறார். ஒருவருக்கு வாதநோய் இருக்குமானால் அந்த வாதநோயை சுமந்து ஆண்டவர் குறுகிபோயிருக்கிறார்.
இங்கு ஒருவனுக்கு தாங்கமுடியாத வயிற்றுநோய் இருக்குமானால், அந்த வயிற்று வலியை இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்பாக சுமந்துவிட்டார். அத்தனை பேருடைய பாடுகள், வியாதிகள் அன்றைக்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுமந்துவிட்டார் தெரியுமா?
பிரசங்கம் பண்ணிவிட்டு முடிவில் கேட்டார், உண்மையாகவே உன்னுடைய வியாதியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுமந்தார் என்று சொல்லுகிறவர்கள் ஓடி வந்து இந்த மேடையை சுற்றி சுற்றி ஓடுங்கள் என்று சொன்னார். இங்கு வாதம் பிடித்து எழும்பமுடியாத நான்குபேர் தூக்கி வந்த ஆளெள்ளாம் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு பெண் மாத்திரம் எழுந்து வந்து, அவளை நான்கு பேரா தூக்கிகொண்டு வந்தார்கள்? இயேசு சுமந்தார். இயேசு சுமந்த பிறகு நான் சுமக்க வேண்டுமா? சாத்தானே பேசாதே போ என்று சொல்லி எழும்பினாள் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள். அன்றைக்கு ஒன்றிரண்டுபேர் அப்படி ஒப்புக்கொடுத்தார்கள்.
நம்முடைய பாவத்திற்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசுவுடைய பொன்மொழி எவ்வளவு விசேஷமானது. முன்னால், மகாத்துமா காந்தி என்று சொன்னால் எனக்கு அப்படியே சொக்கிடும். முன்னால் சுபாஷ்சந்திரபோஸ் என்று சொன்னால் எனக்கு தாங்கவே முடியாது.
அவரை போல ஒரு வீரனாயிருக்கவேண்டும். மகாத்துமா காந்தி என்று சொன்னால், அவருடைய புத்தகம், அத்தனையும் நான் படித்திருக்கிறேன். அவருக்கு மலை பிரசங்கம். மத்தேயு 5,6,7 இந்த மூன்று அதிகாரமும் உயிர். ஒவ்வொரு நாள் காலைஜெபத்தில் இதை வாசித்தால் தான் அவருக்கு அமைதி. அதினாலே மலை பிரசங்கம் என்றே ஒரு புத்தகம் போட்டிருக்கிறது.
மலை பிரசங்கத்தை கோடி தடவை படியுங்கள். பரலோகம் போகமாட்டீர்கள். ஆண்டவர் இயேசு மலை பிரசங்கத்தை பண்ணுவதற்காக தான் வந்தாரா? அவர் பாவிகளை இரட்சிக்க வந்தார். சிலுவையிலே தன்னுடைய ஜீவனை கொடுக்க வந்தார். சிலுவையில்லாவிட்டால் மலை பிரசங்கம் ஒன்றுமேயில்லை. ஒரு சாக்ரடீஸ் உபதேசம் போல், ஒரு தத்துவசாஸ்திரி உபதேசம் போல், ஒரு பிலாட்டோ உபதேசம் போல், ஒரு இராமகிருஷ்ண பரமகம்சன் உபதேசம் போல், ஆனால் கிறிஸ்துவினுடைய உபதேசம் விசேஷம் தெரியுமா?
அவர் கல்வாரி சிலுவையிலே தன்னுடைய ஜீவனை கொடுத்தார். என் பாவம், உங்கள் பாவம், விசுவாசிக்கிறவர்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் சுமந்தார், தீர்த்தார், பாவத்தை, வியாதியை, பாரத்தை, கவலையை தீர்த்தார். இந்த விசுவாசம் தான் இரட்சிப்பு. இந்த விசுவாசத்திற்குள்ளே வராத மனுஷன், தத்துவம் முழுவதும் படித்தால் பரலோகம் போய் சேரமுடியாது. இன்று அநேகர் ஏமாந்து, ஏமாந்து, போகிறார்கள். தத்துவங்களையெல்லாம் படிக்கிறார்கள். இயேசு உன்னை இரட்சித்தாரா என்று கேட்டால் சொல்ல தெரியவில்லை. இன்றைக்கு நீங்கள் அப்படி போகவே கூடாது. நான் இயேசுவை பிரசங்கம் பண்ணுகிறேன். அவரை சிலுவையில் அறையப்பட்டவராய் பிரசங்கம் பண்ணுகிறேன்.
இந்த பிரங்கம் சாதூரிய ஞானமில்லாமல் இருக்கும். இது அழகுபடுத்தி சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. இந்த சிலுவையை, மொரட்டு சிலுவையாய் பிரசங்கம் பண்ணுகிறேன். சிலுவையில் அறையப்பட்டவராய் பிரசங்கம் பண்ணுகிறேன். யூதர்களுக்கு இடறல். என்ன இடறல்? இயேசு பரவாயில்லை நல்லவர் தான், ஆனால் இயேசு எப்படி வரவேண்டும்? மேசியாவாகதான் வரவேண்டும்.
நீர் மேசியாவானால், தேவனுடைய குமாரனானால் சிலுவையை விட்டு இறங்கி வாரும் என்று சொன்னால் இவர் இறங்கி வரவில்லையே? சிலுவையிலிருந்து இறங்கி வரமுடியாத ஒரு தெய்வம் இருக்கமுடியுமா? ஒரு தெய்வமானால் சாகமுடியுமா? மேசியாவானால், ரோமருடைய கையிலிருந்து எங்களை விடுவிக்கமாட்டாரா? இது சந்தேகம். அந்த தெயுதாஸ் என்று சொல்லுகிறவன் வந்தான், அவன் கொஞ்சம் அற்புதம் செய்தான். இயேசு சிலுவையில் அறைகிறது சரியில்லையே. “ மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்”(கலா. 3:13).
சபிக்கப்பட்டவனை மேசியா என்று சொன்னால் எப்படி நம்புவது. அவன் அப்படியே இடறி கொண்டிருக்கிறான். கிரேக்கன் நல்ல ஞானம், பெரிய அறிவு. அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிலாட்டோ, அவர்களெல்லாம் கிரேக்க வம்சத்தை சார்ந்தவர்கள். அலெக்ஸாண்டர் ஒரு சி.எஸ்.ஐ நாட்டியர் ஒருவர் கேட்டார், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்னாடி இயேசு சிந்திய உலர்ந்து போன இரத்தம் பாவத்தை மன்னிக்குமா? உமக்கு தலையில் அறிவில்லையா?
கிரேக்கன் இப்படி தான் கேட்பான். மூன்று குற்றவாளிகளில் அவர் நடு குற்றவாளி. ஒரு குற்றவாளிக்கு பின்னாலே போனால் நன்றாகயிருக்குமா? இன்று அநேகருக்கு இரட்சிப்பு என்று சொன்னால் பைத்தியமாயிருக்கிறது. இப்படி தோத்திரம் பண்ணினால் தான் பரலோகம் போகமுடியுமா?
இயேசுவின் இரத்தத்தினாலே பிறந்தோம். பரலோக தகப்பனுக்கு சொந்த பிள்ளைகளாக மாறிவிட்டோம். பரலோகத்திலுள்ள அப்பா நம்முடைய சொந்த அப்பா. நமக்கு தைரியம் எங்க அப்பா, அவர் மாத்திரம் சிலுவையில் தொங்காவிட்டால், ஆண்டவரை மாத்திரம் அப்பா என்று கூப்பிடும் உரிமை உங்களுக்கு ஒருவருக்கும் உரிமை கிடையாது.
இந்த சிலுவையில் அறையப்பட்ட இயேசு இந்த யூதனுக்கு பெரிய இடறலானார். கிரேக்கனுக்கு பைத்தியமானார், விளங்காத புதிர். நீங்கள் யாரை விசுவாசிக்கிறீர்கள்? சிலுவையிலே தொங்குகிற இயேசுவை. எனக்காக சிலுவையில் தொங்கினவர், எனக்காக உயிரோடு எழுந்தவர், இன்றும் எனக்காக ஜீவிக்கிறவர். இதை நினைத்தவுடன் எனக்கு தேவ பெலன் உண்டாகிறது. தேவ பெலன் தேவனுடைய பெலன். இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு விசுவாசிக்கிற நமக்கு தேவனுடைய பெலன்.
சிலுவையில்லாத மனுஷனுக்கு தேவ பெலன் கிடையாது. ஏனென்றால் சிலுவையில்லாவிட்டால் உயிர்த்தெழுதல் இல்லை. உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் ஜீவன் இல்லை. பாஸ்டர் சாம்சுந்தரம் சாவதற்கு முன்பு என்னை கூப்பிட்டு பிலிப்பியர் மூன்றாம் அதிகாரம் சிலுவைக்கு பகைஞர் இருக்கு, நன்றாக ஆராய்ச்சிபண்ணு.
இன்றைக்கு சிலுவைக்கு பகைஞர் ஏராளமாய் நிரம்பி போயிருக்கிற காலத்திலே ஆண்டவர் வயதான மனுஷனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுவை நேசிக்கிற ஒரு கூட்டம் உண்டு. அந்த கூட்டம் இயேசுவின் சிலுவைக்கு பகைஞராயிருக்கிறார். இந்த அப்போஸ்தல கிறிஸ்தவ சபை இயேசுவை நேசிக்கிற சபையாய் மட்டுமல்ல, சிலுவையை நேசிக்கிறவர்களாயிருக்கவேண்டும்.
இன்றைக்கு எத்தனையோ பேர் சிலுவையை ஏற்றுக்கொள்ளவில்லை. தாலியில் சிலுவை போட்டிருப்பார்கள். கல்லறையில் சிலுவை போட்டிருப்பார்கள். சிலுவையை பார்க்கவேண்டும், அப்பா என் பாவம் சிலுவையில் சுமந்து தீர்க்கப்படுகிறது.
என் சஞ்சலம் முழுவதும் சிலுவையில் தீர்க்கப்படுகிறது. இந்த சிலுவை மாத்திரம் இல்லாவிட்டால் நாம் எல்லாம் தோற்றுபோவோம். சிலுவையின் தரிசனம் உங்கள் ஒவ்வொருவருடைய கண்களிலும் பிரத்திசயமாயிருக்கவேண்டும். அந்த சிலுவையில் என்னுடைய நேசர் பதினாயிரங்களில் சிறந்தவர், வெண்மையும் சிவப்புமானவர் அந்த கேடடைந்து தொங்கி கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரம் ஆசையோடு அப்பா என்று சொல்லி, உங்களுக்கு தலைக்கு மேலுள்ள எந்த பிரச்சனையாயிருக்கட்டும், அப்பாவிடம் அப்படியே ஒப்படையுங்கள். சாத்தானே, கள்ள பிசாசே நாங்கள் யார் தெரியுமா? ஆண்டவருடைய பிள்ளைகள். எங்கள் பாரம் கவலையெல்லாம் எங்கள் இயேசு என்றைக்கோ சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார். உன் தலையை கூட இயேசு சிலுவையில் நசுக்கிவிட்டார். தலைகாட்டவே முடியாது.