திறக்கப்படுவாயாக! : TAMIL SERMON NOTES - Free Tamil Christian Message

திறக்கப்படுவாயாக!
EPHPHATHA – BE OPENED!
Message By : சகோ. சாம் ஜெபத்துரை
தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

  “வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமமூச்சுவிட்டு எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்” (மாற்கு 7:34).

 “எப்பத்தா” என்றால் “திறக்கப்படுவாயாக” என்று அர்த்தம். அன்று ஊமையனுடைய நாவை இயேசு தொட்டு எப்பத்தா என்று சொன்னபோது அவனுடைய வாய் திறந்தது. பேசினான். இன்று நம்முடைய செவிகள் திறக்கப்படுவதாக. நாவுகள் திறக்கப்படுவதாக. கண்கள் திறக்கப்படுவதாக.  எப்பத்தா!

 இயேசுவிடம் அந்த மனிதன் வந்தான். கொன்னை வாய் உடையவன். அதே நேரத்தில் செவிடனாகவும் இருந்தான். கர்த்தர் அவனை சுகமாக்குவதற்காக தனியே அழைத்துச் சென்றார்.

 கர்த்தர் தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருடைய ஆண்டவராய் இருக்கிறார்! உலகத்தில் கோடி மக்கள் இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை அறிகிறவர். உங்களை தனியே அழைத்துச் செல்லுகிறவர். கிறிஸ்துவோடு தனித்திருக்க நேரம் செலவழியுங்கள். அது உங்கள் அற்புதங்களின் நேரம்.

 இயேசு அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்தார். பெருமூச்சுவிட்டார். எப்பத்தா என்றார்.

 கர்த்தர் நம் கண்களைத் தொட்டு எப்பத்தா என்று சொல்லட்டும். அப்பொழுது கிறிஸ்துவை கண் குளிரக் காண்போம். முகம் முகமாய் தரிசிப்போம். ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு பரலோக தரிசனங்களைக் காண்போம். நித்தியத்தை அறிவோம்.

 இன்று அநேகருடைய கண்களை இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் குருடாக்கி வைத்திருக்கிறான் (2கொரி. 4:4). இருளானது அவன் கண்களை குருடாக்கினபடியால் தான் போகும் வழி இன்னதென்று அறியாதிருக்கிறான் (1யோவா. 2:11).

 ஆதாம் ஏவாளின் கண்கள் திறக்கப்படும் என்று சாத்தான் சொன்னான். ஆனால், அவர்களுடைய கண்களோ குருடாய்ப் போனது. அவர்களால் தேவனைக் காண முடியவில்லை. பயந்து விருட்சங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். இன்றைக்கு குருடான கண்களைப் பார்த்து, இயேசு,  “எப்பத்தா” என்று சொல்லுகிறார்.

 இமயமலைச் சரிவிலே ஒரு சந்நியாசி வெளிச்சத்தை வெறுத்து இருட்டான குகைக்குள் போய் அமர்ந்தார்.  அந்தோ, சில வருடங்களுக்குள் அவரது இரண்டு கண்களும் பார்வையிழந்துப் போயின. சாது சுந்தர் சிங் அவரை சந்தித்து வெளியே கொண்டு வந்தார், ஜெபித்தார். அவர் கண்கள் திறக்கப்பட்டது.

 “இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்” (யோவா. 12:35).

 ஒரு முறை ஒரு ஆலயத்திலே ஒரு போதகர், “வெளிப்படுத்தின விசேஷம் வெறும் சொப்பனம்தான். அது  வேதத்தில் இடம் பெற்றிருக்கக்கூடாது. யோனா கட்டுக்கதை என்றும் சிருஷ்டிப்பின் வரலாறு ஒரு புராணம் என்று” பிரசங்கித்தார். வேதாகமக் கல்லூரியிலே படித்தவர், பெரிய சபைக்கு குருவானவராய் பணியாற்றுகிறவர் இப்படி போதித்தார். அதிகப் படிப்பு அவர் கண்களை குருடாக்கியிருக்கிறது.

 இப்படிப்பட்டவர்கள் சபை நடத்துவதைப் பார்த்துதான் அன்று இயேசு கிறிஸ்து “குருடருக்கு வழிகாட்டிகளான குருடரே” என்று அழைத்தார் (மத். 15:14; லூக். 6:39; மத். 23:16,24,26).

 உங்கள் விசுவாசக் கண்கள் திறக்கப்படட்டும். சொப்பனங்களையும், தரிசனங்களையும் காணும்படி  ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படட்டும். மறைவான இரகசியங்களை அறிந்து கொள்ளும்படி மனதின் கண்கள் திறக்கப்படட்டும். எப்பத்தா!

 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான்  பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்” (சங். 119:18).

 1. நியாயத்தீர்ப்பா? எப்பத்தா!

 “அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நன்று உருவின பட்டயத்தைத்  தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்” (எண். 22:31).

 பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை கூலிக்குப் பொருத்தி, பாலாக் என்ற ராஜா இஸ்ரவேலரை சபிக்கும்படி வற்புறுத்தினான்.

 அவன் கழுதையில் செல்லுகிற வழியிலே கர்த்தர் கழுதையின் கண்களைத் திறந்தார். அது தேவதூதனைக்  கண்டு விலகிப்போனது. பிலேயாம் அதை அறியாமல் கழுதையை மூன்று முறை தடியினால் அடித்தான்.

 கழுதை வாய் திறந்து பேச ஆரம்பித்தது. அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே பிலேயாமுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கும்படி உருவின பட்டயத்தோடு கர்த்தருடைய தூதன் நின்று கொண்டிருந்ததைக் கண்டான்.

 இன்றைக்கு அநேகர் தங்களுடைய குறையை உணராமல் குருடராக இருந்துகொண்டு மனைவியையும், பிள்ளைகளையும் அடித்து நொறுக்குகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு ஒரு “எப்பத்தா” என்று சொல்லுவாராக.

 சிலர் தங்கள் கண்களில் உள்ள உத்திரத்தை எண்ணிப் பார்க்காமல் மற்றவர்களின் குறைகளையே கண்டுபிடித்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு ஒரு எப்பத்தா என்று சொல்லுவாராக.

ஒரு பெண் துன்மார்க்கமாய் நடந்து குடும்பத்தாருக்குப் பிரியம் இல்லாத தீய வாலிபனோடு ஐக்கியம் கொண்டாள். வீட்டில் எதிர்ப்பு வந்ததும் தன்னைத்தானே தீக்கொழுத்திக் கொண்டாள். அவள் உயிர் ஊசலாடியது.

 தேவனுடைய ஊழியக்காரர் வந்து இரட்சிப்பையும், தேவனுடைய ராஜ்யத்தையும் குறித்து பேசியபோது அவளோ நான் மரிக்கப்போவதில்லை. ஒருநாள் வாழ்ந்தாலும் அந்த மனிதனோடுதான் வாழ்வேன். இயேசுவைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அப்படியே கண்களை மூடி ஜீவனை விட்டாள். ஐயோ, அவள் கண்கள் திறக்கப்படவில்லையே.

 பிலேயாமின் கண்களை கர்த்தர் திறந்தபோது அவன் தன்னைத் தாழ்த்தி கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான். “கண்கள் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது” என்று சொல்லி அருமையான தீர்க்கதரிசன வசனங்களை எழுதினான் (எண். 24:2-4).

 என் கண்களைத் திறந்தருளும் என்று ஜெபியுங்கள். அப்பொழுது உருவின பட்டயத்தோடு நிற்கிற தேவதூதனை அல்ல, கல்வாரி சிலுவையிலே உங்களுக்காக இரத்தம் சிந்தி உங்களை நேசிக்கிற கிறிஸ்துவைக் காண்பீர்கள்.

 2. தேவைகளா? எப்பத்தா!

 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்” (ஆதி. 21:19).

 ஆபிரகாமின் மறுமனையாட்டியான ஆகார் வீட்டைவிட்டு தள்ளப்பட்டபோது அவளுக்குக்  கிடைத்ததெல்லாம் கொஞ்சம் அப்ப¬ம், ஒரு துருத்தி தண்ணீரும் தான். தண்ணீர் சீக்கிரமாய் செலவழிந்து போயிற்று.  பிள்ளை தாகத்தால் தவித்தது. ஆகார் சத்தமிட்டு அழுதாள்.

 கர்த்தர் ஒரு அற்புதத்தைச் செய்து அவளுடைய கண்களைத் திறந்தார். அது ஒரு எப்பத்தா. அருகிலே துரவைக் கண்டு பிள்ளையின் தாகத்தைத் தீர்த்தாள்.

 கர்த்தருடைய பிரசன்னம் நம் அருகில்தான் இருக்கிறது. அவருடைய ஒத்தாசையும் அற்புத¬ம் அருகில்தான் இருக்கிறது. நம்முடைய கண்களுக்கோ அது தெரியவில்லை. எதிர்காலம் எப்படியோ? பிள்ளைகள் நிலைமை எப்படியோ? என்று கலங்கிப் போய்விடுகிறோம்.

 பெலிஸ்தியரை மடங்கடித்து வந்த சிம்சோன் தாகத்தால் தவித்தார். வேதம் சொல்லுகிறது: “தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார். அதிலிருந்து தண்ணீர் ஓடி வந்தது. அவன் குடித்தபோது அவன்  உயிர்  திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்” (நியா. 15:19).

 மாராவின் கசப்பை மதுரமாக்குகிற மரம் அருகில்தான் இருந்தது. ஆனால் யாருக்கும் தெரியவில்லை. கர்த்தர் மோசேயின் கண்களைத் திறந்தபோது அந்த அற்புதமான மரத்தைக் கண்டார். அதை வெட்டித் தண்ணீரில் போட்டபோது மாரா மதுரமாயிற்று.

 ஆபிரகாம் தன் மகனை மோரியா மலைக்கு அழைத்துச் சென்றபோது கர்த்தர் மகனுக்குப் பதிலாக அங்கே ஒரு ஆட்டுக்குட்டியைக் கட்டளையிட்டார். அதுவரையிலும் அது அங்குதான் நின்றுகொண்டிருந்தது. ஆபிரகாம்  அதை அறியவில்லை. ஆனால், கண்கள் திறக்கப்பட்டபோது ஆட்டைக் கண்டார். தன் மகனுடைய ஸ்தானத்திலே  அந்த ஆட்டை பலி செலுத்தினார்.

 அவர் நமக்கு யெகோவாயீரே. இன்றைக்கு எப்பத்தா என்று நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார். உங்களுடைய பிரச்சனையை மாற்றும் துரவு உங்கள் அருகில் இருக்கிறது. உங்களுக்கு ஒத்தாசை செய்யும் பர்வதம் அருகில் இருக்கிறது. உங்களுக்காக நின்று கொண்டிருக்கிற தேவ ஆட்டுக்குட்டி அருகில் இருக்கிறது. உங்கள் கண்கள் திறக்கப்படட்டும்.

 ஆகாரின் கண்களைத் திறந்தபோது ஆகார் கர்த்தருக்கு, “நீர் என்னை, காண்கிற தேவன்” ”என்று பெயரிட்டாள். நாம் அவருக்கு, “நீர் எங்கள் கண்களைத் திறக்கிற தேவன்” என்று பெயரிடுவோமா?

உங்களுக்காக திறக்கப்பட்ட ஒரு நீரூற்று உண்டு. அது இம்மானுவேலின் காயங்கள் (சக. 13:1). 

உங்கள் அருகிலேயே ஒரு பெரிய நதி வருகிறது. உங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு அதைப் பாருங்கள். அது ஜீவ நதி. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியாகிய நதி.

 ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போது அந்த நதியின் மூலமாய் உங்களுக்கு வருகிற வரங்களையும்  வல்லமையையும் நீங்கள் காண்பீர்கள். அறிவை உணர்த்தும் வசன¬ம், ஞானத்தை போதிக்கும் வசனம். வெளிப்பாட்டு வரங்களும் உங்களுக்குக் கிடைக்கும் (1கொரி. 12:8-10).

 அந்த வரங்கள் நமக்கு ஆவிக்குரிய கண்கள் போல விளங்குகின்றன. ஒரு மனிதனுடைய பிரச்சனை என்ன? எதை மறைத்து வைத்திருக்கிறான்? என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுவீர்கள்.

 “என்னை நோக்கிக்கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3). அவ-ரே “எப்பத்தா” என்று சொல்லுகிறார்.

 3. போராட்டங்களா? எப்பத்தா!

 “அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்க-ளைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ எலிசாவைச் சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2இராஜா. 6:17).

சீரியா ராஜாவின் படையைப் பார்த்ததும் எலிசாவின் வேலைக்காரன் பயந்து நடுங்கினான். எலிசாவோ அவனுடைய கண்களைக் கர்த்தர் திறக்கும்படி விண்ணப்பம் செய்தார்.

 உலக மனுஷனுடைய கண்கள் அவனுடைய விரோதிகளையும், சத்துருக்களையும் காண்கிறது. பயம் கொள்ளுகிறது. ஆனால், தேவனுடைய பிள்ளைகளுடைய கண்களோ தங்களுக்கு ஒத்தாசையாய் இருக்கிற தேவ தூதர்களையும், அக்கினி இரதங்களையும், குதிரைகளையும் காண்கிறது, தைரியமடைகிறது.

 மாம்ச கண்களினால் கண்டவர்கள் சத்துருக்களையும், எதிரிகளையும், பிசாசுகளையும் கண்டுபயப்படுகிறார்கள். ஆனால், நாமோ ஆவிக்குரிய கண்களை உடையவர்களாய் இருந்து நம்மோடு இருக்கிறவர்கள் அதிகமான பேர்; நம்மோடு இருக்கிறவர் பெரியவர் என்பதை காண்கிறோம்.

 கர்த்தர் ஒருநாள் யோசுவாவின் கண்களைத் திறந்தபோது அங்கே சேனைகளின் அதிபதியாக உருவின பட்டயத்தோடு கர்த்தர் நின்று கொண்டிருக்கிறதைக் கண்டார். எரிகோவின் யுத்தத்திலே ஜெயம் பெற்றார்.

ஒவ்வொரு ஆராதனை நேரத்திலும் தேவ பிரசன்னத்தைப் பார்க்க உங்கள் கண்கள் திறக்கப்படட்டும். உங்களோடு இணைந்து ஆராதிக்க தேவதூதர்கள் ஆயிரம் ஆயிரமாய் வருவதை உங்களுடைய கண்கள் காணட்டும்.

 “யாக்கோபு என்னும் சிறுபூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே;  நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசா. 41:14).

 4. துயரங்களா? எப்பத்தா!

 “அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்”         (லூக். 24:31).

 இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு சீஷர்கள் இரண்டுபேர் துக்கத்தோடு எருசலேமிலிருந்து எம்மாவுக்குப் போனார்கள். இயேசு அவர்களோடு வந்தும், வேத வசனங்களை விளக்கிக் காட்டியும், அவர்களுடைய உள்ளம் கொளுந்து விட்டு எரிந்தும் அவர்களை அவரை அறியவில்லை! அந்நியராகவே எண்ணினார்கள்.

 “இரண்டு பேர் என் நாமத்தில் கூடி வந்தாலே அவர்கள் மத்தியில் வருவேன்” என்று சொன்ன ஆண்டவர் அவர்களோடு நடந்து சென்றார். ஆனால், அவர்களோ அவரை அறியவில்லை.

 மனிதனுக்கு தேவையான முக்கியமான ஒன்று உண்டென்றால் கிறிஸ்துவை அறிகிற அறிவுதான். “அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று விட்டேன், குப்பையுமான எண்ணுகிறேன்” என்றார் அப். பவுல் (பிலி. 3:8,10).

 கர்த்தரைத்தேடுங்கள், நிச்சயமாகக் கண்டடைவீர்கள். “அதிகாலையில் என்னைத் தேடுகிறவன் என்னைக் கண்டடைவான்” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறாரே.

 எம்மாவூருக்குச் சென்ற சீஷர்களின் கண்களைக்  கர்த்தர் திறந்தபோது அவரை அவர்கள் அறிந்தார்கள் (லூக். 24:31).

 நாம் கர்த்தரை அறிய பல வழிகள் உண்டு. வேதத்தின் மூலமாக, பிரசங்கங்களின் மூலமாக, தீர்க்கதரிசிகளின் மூலமாக அவரை அறிகிறோம். ஆனால், நம் கண்கள் திறக்கப்படும்போதோ முகமுகமாய் அவரை அறிந்து கொள்ளுவோம்.

 “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது மூகமூகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்வேன்” (1கொரி. 13:12).

 இந்திய மக்களின் கண்களைக் கர்த்தர் திறப்பாராக. தங்களுடைய சிருஷ்டிக் கர்த்தரை அறியும்படி தங்களுக்காக ஜீவனைக் கொடுத்த இரட்சகரை அறியும்படி பாரம்பரியங்களிலிருந்து வெளியே வரும்படி கர்த்தர் கண்களைத் திறப்பாராக.

 பத்மு தீவிலே கர்த்தர் அப். யோவானுடைய கண்களைத் திறந்தார். எத்தனை அருமையான பரலோக தரிசனங்கள். வருங்காலத்தைப் பற்றிய வெளிப்பாடுகள்.

 ஆகாரின் கண்களைத் திறந்தவர். பிலேயாமின் கண்களைத் திறந்தவர். எலியாவின் வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தவர். எம்மாவூர் சீஷர்களுடைய கண்களைத் திறந்தவர்.  நிச்சயமாகவே உங்களுடைய கண்களையும் திறப்பார். எப்பத்தா!

 5. வரும் நாட்கள் ஒரு எப்பத்தா!

 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக்  கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்; இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது” (லூக். 19:41,42).

 கர்த்தர் எருசலேமைப் பார்த்தபோது வெறும் மாம்சக் கண்களினால் பார்க்கவில்லை. திறக்கப்பட்ட ஆவிக்குரிய கண்களோடு தீர்க்கதரிசனக் கண்களோடு அதைப் பார்த்தார். இனி எருசலேமுக்கு வரப்போகிற அழிவை அவருடைய கண்கள் கண்டது.

 ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுகிறதை அவருடைய தீர்க்கதரிசனக் கண்கள் கண்டது. எருசலேமுக்கு வரப்போகிற பாழ்க்கடிப்புகளையும் அழிவையும் அவரது கண்கள் கண்டது.

அந்த வேதனைகள் அவருடைய இருதயத்தில் பொங்கினபடியால் எருசலேமுக்காக கண்ணீர் விட்டழுது, “உனக்குக் கிடைத்திருக்கிற இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை அறிந்திருந்தாயானால் நலமாயிருக்குமே” என்று சொல்லி புலம்பினார்.

 கர்த்தருடைய கண்கள் கண்டபடியே கி.பி. 70ம் ஆண்டு தீத்து ராயன் புறப்பட்டு வந்து எருசலேமை தீக்கு இரையாக்கி முற்றிலுமாக அதை அழித்தான். யூதர்களை சிதறடித்தான்.

 நியாயத்தீர்ப்பு முதலில் தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாய் இருக்கிறது. வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் காணும்படி நம்முடைய கண்கள் திறக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

 இன்று ஜனங்கள் பாவ சந்தோஷங்களையும், விபச்சாரங்களையும், வேசித்தனங்களையும் நோக்கி ஓடுவதன் காரணம் என்ன? அவர்களுடைய கண்கள் குருடாய் இருப்பதே காரணம். உலக ஆசை இச்சைகளுக்கு அப்பால் இருக்கிற பாதாளத்தையும், அக்கினிக் கடலையும் அவர்கள் காணவில்லையே.

 பகலிலே சூரியன் மிக அருகிலே பிரகாசித்து அதற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களை காணமு¬டியாதபடி நம் கண்களை மறைத்துப் போடுகிறது. அதுபோல இந்த உலகத்தின் பிரச்சனைகள் நம்மை நெருக்கி நித்தியத்தைக் காண முடியாதபடி நம்முடைய கண்களை மறைக்கிறது.

 2இராஜா. 8:11,12 வசனங்களை வாசிக்கும்போது எலிசா சீரிய ராஜாவின் படை தளபதி ஆசகேலைப் பார்த்து சலித்துப்போகும் மட்டும் அழுதுகொண்டே இருந்தான்.

 “நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன். நீ அவர்கள் வாலிபரை பட்டயத்தால் கொன்று அவர்கள் குழந்தைகளை தரையோடே மோதி அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்” (2இராஜா. 8:11,12).

 ஏன் எலிசா அழுதார்? அவர் தீர்க்கதரிசியாய் இருந்ததினால் வருங்காலத்தை முன்னறிந்துக் கண்டு அழுதார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு வரப்போகிற வேதனையை உணர்ந்து அழுதார்.

 நம்முடைய கண்கள் தீர்க்கதரிசனக்  கண்களாய் இருக்கட்டும். வருங்காலத்தை அறிகிற திறக்கப்பட்ட கண்களாய் இருக்கட்டும். உலகத்திற்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் கண்டு ஆத்தும பாரத்தோடு அழுது புலம்புகிற கண்களாய் இருக்கட்டும்.

 எரேமியா தீர்க்கதரிசிக்கு அப்படிப்பட்ட கண்கள் இருந்ததினால் “ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன்” (எரே. 9:1) என்றார்.

 ஏவாள் பழத்தின் அழகைப் பார்த்தாள். சர்ப்பம் கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டாள். ஆனால், அந்தப் பழத்துக்கு அப்பால் இருக்கிற தேவனுடைய கோபாக்கினையையும், நியாயத்தீர்ப்பையும் ஏதேனை விட்டு துரத்தப்படுகிற பரிதாப நிலைமையையும் அவள் காணவில்லை.

 லோத்து சோதோமை நீர் வளம்,  நிலவளம் பொருந்தியிருக்கிறதாய் கண்டாரே தவிர அது வானத்திலிருந்து அக்கினி இறங்கி அழிக்கப்படப்போகிற பட்டணமாக இருந்ததைக்  காணவில்லை.

 யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசை மேன்மையுள்ளதாய் கண்டானே தவிர அதற்கு அப்பால் இருக்கிற தேவனுடைய கோபாக்கினையை, நியாயத்தீர்ப்பை காணவில்லை. அந்தப் பணத்தின் விளைவாக தான் வயிறு வெடித்து சாகப்போவதை காணவில்லை.

 தேவனுடைய பிள்ளையே, உன் கண்கள் திறக்கப்படட்டும். இனிவரப் போகிறவைகளை உன் கண்கள் காணட்டும். நித்தியத்தை உன் கண்கள் காணட்டும். நித்திய சந்தோஷமா? நித்திய வேதனையா? இன்றைக்கு முடிவு எடுப்பாயா?

 யார் யார் இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவங்களறக் கழுவப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்களோ அவர்கள் கண்கள் திறக்கப்பட்டவர்களாய் நித்திய சந்தோஷத்தை நோக்கி மகிழ்ச்சியோடே நடப்பார்கள். “குணசாலியான ஸ்தி” வருங்காலத்தைப் பற்றி மகிழுகிறாள்”  என்று வேதம் சொல்லுகிறது (நீதி. 31:25).

 தேவனுடைய பிள்ளையே,  இன்று  உன் கண்கள் திறக்கப்படட்டும்! எப்பத்தா!

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!